பழையன கழிதலும் புதியன புகுதலும்-2009

என்னை மாதிரி அரைகுறை பதிவர்களின் favorite topic வருட இறுதியில் பழசை எடை பார்ப்பதும் , புதிய தீர்மானங்களை நோக்கி இருப்பதும். எப்படியும் ஜந்தாறு பத்திகள் தேறும், மசக்கையான கர்ப்பிணி போல.
எதிர்பார்த்த ப்ரமோஷன் எதிர்பாராமல் தப்பியது. வேலை நேரத்தில் தூங்கியும், தூங்கும் நேரத்தில் அலுவலையும் பார்க்க நேரிட்டது. டி.வி. சலித்தது. டிவிட்டர் கணக்கு தொடங்கி சிக்ஸர், ஃபோர் விளாசினேன். நாற்பத்தி ஒன்பதை தொட்ட திராவிட் போல் ஆர்வம் மங்கி டக் போல்டு ஆனேன்.
ஃபளாக்கரில் இருந்து வேர்ட்பிரஸ் தாவினேன். ஒன்று நான்கானது. எழுதும் ஆர்வம் எழுத்து பிழை போல் மிகுந்தது. இந்த வருடம் கவிதாயுலகம் தப்பியது. என்றோ எழுதியது கவிதை சரியாக மனைவியின் கையில் சிக்கியது. புரியவும் செய்தது எம்பெருமான் அருளிய சாபம்.
தந்தையான உணர்வு முழுக்க விவரிக்க இயலாது ஒன்று. குழந்தைகளின் உலகம் எவ்வளவு ரம்மியமானது, வள்ளுவருக்கு ஒரு சலாம். அவர்களின் கற்கும் ஆர்வமும், தேடலும் தாயுமானவர், பட்டினத்தார் போன்றோர் தேடலுக்கு ஒத்தது. என்ன இலக்கின்றி நோக்கிய பயணம் நிறைவை தராவிட்டாலும் , முயற்சி கைவிடார்.
நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். பூப்பதை ரசித்து விட்டு நகர கற்று கொள்ளவேண்டும். எத்தனை பெற்றோர்கள் இதற்கு தயார், குறிப்பாக தாய்மார்கள். சிறு செய்கைகளையும் பெரிதென பாராட்டி உச்சி முகர்வது, இவன(ள)ன்றி வேறுலகம் இல்லை என்று தங்கள் தியாகத்தை தானே நியாயம் செய்வது classic mother’s syndrome.
புத்தக, நாளிதழ் வாசிப்பு எல்லாம் நாலு மாமாங்கத்து தள்ளி வைப்பு. நாப்கின், அழு குரல், சமாதானம், தூக்கமிண்மை எல்லாம் part of being a father. அம்மாக்களை நினைத்து பார்கிறேன், அதுவும் அக்காவை பெற்றெடுத்து மூன்று மாசத்துக்குள்ளாக நான் கருவாகி அம்மா பட்ட பாடு இக்கால புது அம்மாக்கள் படிக்க வேண்டிய பால பாடம்.
புது வருட தீர்மானமாக கணக்கு எழுவது என்று முடிவெடுத்துள்ளேன், அதுவும் இம்மாதம் ஒத்திகையும் பாத்தாச்சு. முதலீடுகள், பங்கு சந்தை என்று அறிவை பெருக்க மட்டுமில்லாமல் எட்ட நின்று பரிட்சை செய்யவும் ஆசை.
குழந்தை வளர்ப்பு பற்றிய மூன்று புத்தகத்தை தூசு தட்டவும் போகிறேன் (தூர வீச மனமில்லை). புது அப்பாக்களுக்கு ஒரு எச்சரிக்கை, குழுந்தை வளர்ப்பு பற்ற நான் வாங்கிய புஸ்தகம் எல்லாம் எனக்கு பொருந்தவில்லை ( அது பற்றி பின்னால் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்). படித்து அறிவதை விட பட்டு தெரிவதே மேல்.
என் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்